Tuesday, 25 April 2017

தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம் (V.S.Manickam)


தமிழறிஞர், கவிஞர், பேச்சாளர், நாடகாசிரியர், ஆய்வாளர், உரையாசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட வ.சுப.மாணிக்கம் (V.S.Manickam) நினைவு தினம் (ஏப்ரல் 24, 1934) சிறப்பு பகிர்வு.!!


* புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் (1917) பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. இளம் பருவத்திலேயே பெற் றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். 7 வயது வரை நடேச ஐயரிடம் குருகுலக் கல்வி கற்றார்.

* வணிகம் பழக 11 வயதில் பர்மா சென்றார். பொய் சொல்லுமாறு முதலாளி கூறியதை ஏற்க மறுத்தவர், வேலையை இழந்து 18 வயதில் தமிழகம் திரும்பினார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘வித்வான்’ பட்டம் பெற்றார்.

* சென்னை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், முதுகலை பட்டம் பெற் றார். ‘தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும், ‘தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

* அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ராகவ ஐயங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு விரிவுரையாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளராக புகழ்பெற்றார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர், இரண்டிலுமே நூல்களைப் படைத்தார்.

* காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1970 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார். மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு 7 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

* மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார். அப்போது, பண்டிதமணி அரங்கை நிறுவினார். பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன், அங்கு தமிழ் ஆய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

* தமிழில் பல புதிய சொல்லாக்கங்களை தந்தவர். வீட்டிலும் கலப்படமற்ற தூய தமிழில் பேசினார். தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தினார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

* துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளர் என்ற பதவியில் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொல்காப்பிய ஆய்வு மேற்கொண்டு, நூலாக எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.

* திருக்குறள் நெறிகளின்படி வாழ்க்கை நடத்தினார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்துக்கும், தன் சொந்த ஊரில் இலவச கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவும் உயில் எழுதிவைத்தார். தன் நூலக நூல்களை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறும் உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

* தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப்பாளி. சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர், செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் போற்றப்படும் வ.சுப.மாணிக்கம் 1989 ஏப்ரல் 25-ம் தேதி 72-வது வயதில் மறைந்தார்.

சொல்லின் செல்வர் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை (R.P.Sethu Pillai)


எழுத்தாலும் செந்தமிழ்ப் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை (R.P.Sethu Pillai) நினைவு தினம் (ஏப்ரல் 25, 1961) சிறப்பு பகிர்வு.!!


 திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் (1896) பிறந்தவர். மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல் களை சிறு வயதிலேயே கற் றார். பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

 அங்கு ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சட்டம் பயின்றார். 1923-ல் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். அப்போது நகரமன்ற உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தவறாகக் குறிப்பிடப்பட்டு வந்த தெருக்களின் பெயர்களைத் திருத்தி உண்மையான பெயர்களை நிலைபெறச் செய்தார்.

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் விரைவுரையாளராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். தன் செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந் தார். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

 1936 முதல் 25 ஆண்டுகாலம் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர், தனது பேச்சா லும் எழுத்தாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.

 இவரது உதவியுடன் திராவிடப் பொதுச் சொற்கள், திராவிடப் பொதுப் பழமொழிகள் ஆகிய 2 நூல்களை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது.

 சிறந்த மேடைப் பேச்சாளர். சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் இவரது கம்பராமாயணச் சொற்பொழிவு 3 ஆண்டுகள் நடைபெற்றது. கோகலே மன்றத்தில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிலப்பதிகார வகுப்பு நடத்தினார். தங்கச் சாலையில் உள்ள தமிழ் மன்றத்தில் வாரம் ஒருமுறை என 5 ஆண்டுகளுக்கு திருக்குறள் விளக்கவுரை நிகழ்த்தினார். கந்தக்கோட்ட மண்டபத்தில் 5 ஆண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.

 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களை பதிப்பித்தார்.

 இவர் தமிழகம் முழுவதும் வானொலி நிலையங்கள், பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளும் பல நூல்களாக வந்தன.

 இவரது ‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. செய்யுளுக்கு என்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் என்ற அனைத்தையும் உரைநடையிலும் கொண்டுவந்தவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட் டார். ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டார்.

 சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. தமிழ் விருந்து, தமிழர் வீரம், ஆற்றங்கரையினிலே உள்ளிட்ட இவரது பல படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 65 வயதில் (1961) மறைந்தார்.

வானொலியின் தந்தை "மார்க்கோனி" (Guglielmo Marconi)


வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான "குக்லியெல்மோ மார்க்கோனி" (Guglielmo Marconi) பிறந்த தினம் பிறந்த தினம் (ஏப்ரல் 25, 1874) சிறப்பு பகிர்வு.!!


l இத்தாலியின் பொலொனா நகரில் (1874) பிறந்தவர். தந்தை அந்நாட்டின் பெரும் புள்ளி என்பதால், இளமை யிலேயே வசதியான வாழ்க்கை வாழ்ந்தார். வீட்டுக்கே வந்து ஆசிரியர்கள் கற்பித்தனர். வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தார்.

l இயற்பியலில், குறிப்பாக மின்சாரவியலில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. வீட்டில் சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டார். கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சிகள் பற்றிய புத்தகம் இவரைக் கவர்ந்தது. தொடர்ந்து அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

l கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்கும் முனைப்பில் இறங்கினார். ஒரே ஆண்டில் மின்காந்த அலைகள் மூலமாக சிக்னல்களை அனுப்பிக் காட்டினார். 1895-ல் திசை திரும்பும் மின்கம்பம் (Directional Antenna) என்ற கருவி மூலம் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு செய்தியை அனுப்பினார்.

l இத்தாலியில் இவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததால், இங்கிலாந்து சென்றார். அங்கு 6 கி.மீ. தொலைவு வரை செய்தியை அனுப்பக்கூடிய டிரான்ஸ்மிட்டரை உருவாக்கினார். தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1897-ல் இங்கிலாந்தில் மார்க்கோனி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1899-ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி, இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் எல்லா கால நிலையிலும் இயங்கும் கம்பியில்லாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். இதன் பிறகு இத்தாலி அரசு இவரது ஆராய்ச்சிகளுக்கு பல உதவிகளை வழங்கியது. செனட்டராக நியமிக்கப்பட்டார்.

l ஸ்டீசர் என்ற இடத்தில் வானொலி நிலையத்தை உருவாக்கினார். இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைகள், வர்த்தகக் கப்பல்கள் இவரது கம்பியில்லா தகவல் தொடர்புக் கருவிகளை அதிகம் பயன்படுத்தின. 1901-ல் 2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.

l மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தொடர் அலைகள் உற்பத்தி செய்யும் கருவியையும் கண்டறிந்தார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்பமுடியும் என்பதை நிரூபித்தார்.

l கார்ல் ஃபெர்டினான்ட் பிரவுன் என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909-ல் வழங்கப்பட்டது.

l 1912-ல் நிகழ்ந்த ஒரு விபத்தில் மார்க்கோனி வலது கண்ணை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1920-ல் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. இத்தாலி அரசு இவருக்கு கவுரவம் மிக்க பதவிகளை வழங்கிச் சிறப்பித்தது. ‘மார்க்விஸ்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

l இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவருக்குப் பல்வேறு விருதுகள், பட்டங்களை வழங்கின. பல பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

l இன்றளவும் மக்களுக்கு மிக நெருங்கிய பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிவரும் வானொலியை உலகுக்கு வழங்கிய மார்க்கோனி 63 வயதில் (1937) மறைந்தார்.

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் (Pudhumaipithan)


நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் (Pudhumaipithan) பிறந்த தினம்(ஏப்ரல் 25, 1906) சிறப்பு பகிர்வு.!!


l கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் பிறந்தார். இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.

l தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.

l இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்'.

l ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.

l எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

l சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

l இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. ‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

l திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லி’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

l கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.

l ‘ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

Monday, 24 April 2017


ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ், Panchayath Raj) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல்.



கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் என்ப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது.

பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப் படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராஜ் கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அ சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.

அறிமுகம் :

கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகார பரவலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11 வது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.

நிதி :

ஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.
உள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.
மைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.
மாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.

வரலாறு :

ஊராட்சி மன்றம் ஏப்ரல் 24, 1993 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. டிசம்பர் 24, 1996 பயங்குடியினர் வாழும் பகுதிகளான எட்டு மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா மற்றும் இராஜஸ்தான் ) விரிவுப் படுத்தப்பட்டது.

ஜி.யு.போப் (George Uglow Pope)



ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) பிறந்த தினம் (ஏப்ரல் 24, 1934) சிறப்பு பகிர்வு.!!

l கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (1820) பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

l தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.

l தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.

l தான் போற்றிக் கொண்டாடும் மேலைநாட்டு மெய்ஞானிகளின் வாசகங்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். இந்தியாவில் பல பள்ளிகளைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.

l இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

l புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார். நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.

l தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார். இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.

l தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுள் கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

l இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது. திருவாசகம் மீதான இவரது காதல் அபரிமிதமானது. தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவ்வாறு பாடல் எழுதியபோது, உள்ளம் உருகி கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்தது என்பார்கள்.

l தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 88 வயதில் (1908) மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது. ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.

படம் உதவி : வெளிச்சவீடு

சச்சின் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar)


உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar)பிறந்த தினம் (ஏப்ரல் 24, 1973) சிறப்பு பகிர்வு.!!


* மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் (1973) பிறந்தவர். தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய எழுத்தாளர். தன் மனம்கவர்ந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் பெயரை மகனுக்கு சூட்டினார்.

* அண்ணனின் வழிகாட்டுதலால் கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்றார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்தனர்.

* மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதன்முதலாக 15-வது வயதில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.

* இவரைக் களத்தில் பார்த்த எதிரணி பவுலர்கள் ‘பொடியன்’ என்றார்கள். அந்த பொடியன் பிற்காலத்தில் அவர்கள் அனைவரது பந்துவீச்சையும் பொடிப் பொடியாக்கியதை கிரிக்கெட் வரலாறு பெருமிதத்துடன் பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1990-ல் முதல் சதம் அடித்து, சாதனைக் கணக்கை தொடங்கினார்.

* தொடர்ந்து 24 ஆண்டுகளாக விளையாடியவர், அதுவரை கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்தார். டெஸ்ட் போட்டியில் 13 முறை, ஒருநாள் போட்டியில் 60 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 முறை டெஸ்ட் போட்டிகளிலும் 14 முறை ஒருநாள் போட்டிகளிலும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* உலகக் கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். சென்னை சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகுவலியுடன் ஆடி 136 ரன்களைக் குவித்தார்.

* 200 டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம் என ஏராளமான சாதனைகளைப் படைத்தவர். 2010-ல் குவாலியரில் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ரன்களைக் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். பந்துவீச்சிலும் வல்லவர்.

* ஆட்டத்தில் காணப்படும் ஒழுங்கு, துல்லியம், நேர்த்தி, தனித்துவம் வாய்ந்த பாணி இவற்றால் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியவர். இவரது பெயரில் காமிக்ஸ்கள்கூட வெளிவந்தன.

* மாநிலங்களவை நியமன உறுப்பினராக 2012-ல் தேர்ந்தெடுக் கப்பட்டார். பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கவுரவ கேப்டன் என ஏராளமான விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். 2014-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இவரது ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

* கிரிக்கெட் சாதனையாளரான சச்சின் இன்று 43-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் தூதராக இருந்து, மும்பை மாநகரை தூய்மைப்படுத்தி வருகிறார். மும்பை குடிசைவாழ் மக்கள் நலவாழ்வு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகிய பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.

"எழுத்து சிங்கம்" ஜெயகாந்தன்



காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பிறந்த தினம் (ஏப்ரல் 24, 1934) சிறப்பு பகிர்வு.!!

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!

சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!

சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!

'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!

காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!

ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!

ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன், இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!

ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!

1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!

கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!

'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!

பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!

கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!

பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!

மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!

ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி.

ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!

காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!

ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில் பரிமாறுவது வழக்கம்

ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!

Sunday, 23 April 2017

உலக புத்தக தினம் (World Book Day)



✍ புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.

✍ பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 25 முதல் நவம்பர் 16-ந்தேதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ‘‘அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

✍ இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 23 அன்று புத்தக தினம் கொண்டாடுவதை பொருத்தமான ஒரு விஷயமாக யுனெஸ்கோ மாநாடு கருதியது. புத்தகம் வெறும் எழுத்துகளையோ, வெற்றுத் தாள்களின் தொகுப்புகளையோ கொண்டது அல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணக்கனவு, லட்சியங்களை கொண்டிருக்கிறது.

✍ விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு என்கிறார் கார்லைஸ் எனும் அறிஞர். ‘‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்’’ என்று கூறி இருக்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.

✍ சட்டமேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்த போது, ‘‘எங்கு தங்க விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது?’’ என கேட்டு இருக்கிறார்.

✍ நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம், ‘‘உங்களை ஒரு தனி தீவுக்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டதற்கு ‘‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்’’ என்று பதில் அளித்தார்.

✍ குழந்தைகளுக்கு பிறந்தநாளின் போதும், விழாக்களின் போதும் எண்ணற்ற பரிசுகளை வாங்கி தருகிறோம். ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி தர வேண்டிய மிகச்சிறந்த பரிசு புத்தகங்களே’’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

✍ பூத்த மலரில் தான் நறுமணம் வீசும். ஓடுகின்ற நீரோடை தான் சுத்தமாக இருக்கும் எரிகின்ற விளக்கால் தான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும்.

✍ அறிவை விரிவு செய். அகண்டமாக்கு என்பது பாரதிதாசனின் வெறும் கவிதை வரிகள் அல்ல. வேத வாக்கு. வாசிப்பை நேசிப்போம். சுமையாக கருதாமல் சுவாசத்தை போல் இயல்பானதாய் ஆக்குவோம் அறிவை ஆயுதமாக மாற்றுவோம். தெருவெங்கும் நூலகம். வீடுதோறும் புத்தகம். இதுவே நமது லட்சியம்.

"ஞான கான சரஸ்வதி" எஸ்.ஜானகி


"காற்றை கவுரவப்படுத்தும்" குரலுக்கு சொந்தக்காரர், தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி "எஸ்.ஜானகி" 79-வது பிறந்த தினம் (ஏப்ரல் 23, 1938) சிறப்பு பகிர்வு.!!


➨ ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

➡ வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.

➡ "விதியின் விளையாட்டு" (1957) என்ற படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

➡ முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.

➡ "கொஞ்சும் சலங்கை" திரைப்படத்துக்காக பாடிய "சிங்கார வேலனே" பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.

➡ ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். "இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி" கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

➡ பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே", "செந்தூரப் பூவே", "காற்றில் எந்தன் கீதம்", "நெஞ்சினிலே நெஞ்சினிலே", "ராதைக்கேற்ற கண்ணனோ" போன்றவை காலத்தால் அழியாதவை.

➡ திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

➡ கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு "ஞான கான சரஸ்வதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி "நம்மாழ்வார்" (G.Nammalvar)

இயற்கை விவசாயத்தின் தீவிரப் பிரச்சாரகரும் தமிழகத்தின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜி. நம்மாழ்வார் (G.Nammalvar) பி...