Friday, 6 April 2018

இயற்கை வேளாண் விஞ்ஞானி "நம்மாழ்வார்" (G.Nammalvar)


இயற்கை விவசாயத்தின் தீவிரப் பிரச்சாரகரும் தமிழகத்தின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜி. நம்மாழ்வார் (G.Nammalvar) பிறந்த தினம் (ஏப்ரல் 6, 1938) சிறப்பு பகிர்வு.!!


* தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்தார் (1938). அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி எஸ்ஸி (அக்ரி) பட்டப்படிப்பு பயின்றார். காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக 1963-ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்.

* அங்கு நடைபெற்றுவந்த ஆராய்ச்சிகள் ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணம் இவரது மனதை வருத்தியது. தனது கருத்தைச் சக விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அதனை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தையும் கூறிவந்தார். ஆனால் அவர்களோ இவரது கருத்தைப் பொருட்படுத்தவில்லை.

* தன்னைச் சுற்றி நடப்பதை அமைதியாக, எல்லோரையும் போலப் பொறுத்துக் கொண்டுபோக முடியாத இவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ‘அய்லாண்ட் ஆஃப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். இந்த அமைப்பின் சார்பில் சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார்.

* இடுபொருட்களைப் பற்றியும், விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறைகளைக் குறித்தும் தீவிரமாகச் சிந்தித்தார்.

* வினோபா பாவேயின் சித்தாந்தங்களால் கவரப்பட்ட இவர், தனக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டார். தமிழகத்தில் இயற்கை வேளாண் முறைகளைப் பரப்புதல், மண்ணின் உயிர்ச் சத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

* தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியதற்கு முக்கியக் காரணம் என இவர் போற்றப்படுகிறார். இதற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ‘சுற்றுச் சூழல் சுடரொளி’ விருதை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தி கிராம கிராமப்புற நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியது.

* தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களையும் நடத்திவந்தார். ‘குடும்பம்’, ‘லிசா’, ‘மழைக்கான எகலாஜிகல் நிறுவனம்’, இந்திய அங்கக வேளாண்மைச் சங்கம்’, ‘நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்’, ‘உலக உணவு பாதுகாப்புக்கான பண்ணை ஆராய்ச்சி மையம்’ முதலான பல அமைப்புகளைத் தொடங்கினார்.

* நல்ல எழுத்தாளராகவும் இருந்த இவர் ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘தாய் மண்ணே வணக்கம்’, ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’, ‘இனி விதைகளே பேராயுதம்’, ‘நோயினைக் கொண்டாடுவோம்’, ‘களை எடு’, ‘பூமித் தாயே’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

* இயற்கை விவசாயம், விவசாயிகள், இயற்கை வாழ்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்தார். விவசாயிகளின் நலனுக்கும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். * காலாவதி ஆக்கப்பட்ட மரபு சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை மீட்டெடுத்துப் புதுப்பித்தார். இறுதிவரை விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் சுயநலன் கருதாமல் மகத்தான பங்களிப்பை வழங்கி வந்ததுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் ஊக்குவித்த சாதனை மனிதர் ஜி. நம்மாழ்வார் 2013-ம் ஆண்டு 75வது வயதில் மறைந்தார்.

Sunday, 4 June 2017

பாடும் வானம்பாடி எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam)


உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் (ஜுன் 4, 1946) சிறப்பு பகிர்வு.!!


# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.

# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.

# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.

# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.

# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.

# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.

Friday, 2 June 2017

"இசை விஞ்ஞானி, ராகதேவன்" இளையராஜா (Ilaiayaraaja)


திரைஇசை உலகில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (Ilaiayaraaja) பிறந்த தினம் (ஜூன் 2, 1943) சிறப்பு பகிர்வு.!!


l தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து சுமார் 20 ஆயிரம் கச்சேரிகள், நாடகங்களில் இசை அமைத்தார்.

l திரைப்படத்துக்கு இசை அமைக்கும் ஆர்வத்தில் 26 வயதில் சென்னை வந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

l ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

l தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் நாட்டுப்புற மணம் கமழ வலம்வந்த இவரது இசை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கர்னாடக இசையிலும் பல பாடல்களை அமைத்து புகழ்பெற்றார்.

l முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

l இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

l பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.

l தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.

l ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே டியூன் போடக்கூடியவர். கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.

l இவரது வாரிசுகளும் இசை அமைப்பாளர்களாகப் புகழ்பெற்று தந்தைக்குப் பெருமை சேர்க்கின்றனர். இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் போற்றப்படும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்றும் வெற்றி நடைபோடுகிறது.

Friday, 5 May 2017

நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?


ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம்.


வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். Alzheimer's என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.

மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி vascular dementia. இவை அல்லாமல் சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், multiple sclerosis என்ற மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.

பாதிப்புகள்

இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.

பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு

மனச்சோர்வு

நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு. எதிர்மறை எண்ணங்கள், தனிமையை விரும்புதல், பசி உணர்வு குறைதல், தூக்கமின்மை, உடல் பலவீனம், நம்பிக்கையின்மை, வாழ்வதே அர்த்தமற்றது என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.

நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.

ஆரம்பநிலை அறிகுறிகள்

1. மொழித் திறனில் தடுமாற்றம்

2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்

3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை

4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது

5. முடிவு எடுப்பதில் சிரமம்

6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை

7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்

8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்

இடைநிலை அறிகுறிகள்

நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.

1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்

2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்

3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்

4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது

5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்

6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்

இறுதிநிலை அறிகுறிகள்

இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்.

1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்

2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்

3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்

4. தானாக நடக்க இயலாது

5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது

6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது

7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது

8. தான் யார் என்பதே மறந்துவிடும்

ஆயுர்வேதமும் நினைவாற்றலும்

மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது. பிரக்ஞா என்றால் cognition என்று அர்த்தம். இது தீ எனும் அறிவு, த்ருதி எனும் மனஉறுதி, ஸ்ம்ருதி எனும் நினைவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. நினைவையும் recording, returning, recalling என்று பிரிப்போம். ஒரு விஷயத்தைப் பதிவு செய்தல் (கபம்), அதை நீண்ட நாள் தக்கவைத்துக் கொள்ளுதல் (பித்தம்), தேவைப்படும்போது நினைவுபடுத்துதல் (வாதம்).

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, மனஅழுத்தம் போன்றவை நவீன வாழ்க்கையில் பெரிதும் அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் மறதியைத் தடுக்கும் சிறந்த மருந்தாக நெய் இருந்தது. வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகளில் சில.

நினைவாற்றல் அதிகரிக்கக் கைமருந்துகள்

# 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 - 5 உட்கொள்ளலாம்.

# வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.

# ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

# வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.

# தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.

# கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.

# 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.

# சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.

# உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.

# தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

# அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.

# 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 - 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.

# புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

# தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.

# தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.

# பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

Thursday, 4 May 2017

மறக்கப்பட்ட ஆளுமை: ஆர்.கே.சண்முகம்""


இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்த "ஆர்.கே.சண்முகம்"" நினைவு தின (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) சிறப்பு பகிர்வு.!!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹர்லால் நேரு, நிதியமைச்சர் பதவிக்கு யார் யாரையோ மனதில் வைத்திருந்தார். ஆனால், அவருடைய அரசியல் ஆசானான காந்தி தெற்கிலிருந்து ஒருவரை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்தார். அவர் காங்கிரஸைச் சாராதவர், சொல்லப்போனால் இங்கிலாந்து அரசுக்கு வேண்டப்பட்டவர் என்று அந்நாட்களில் சொல்லப்பட்டவர். ஆனால், மிகச் சிறந்த நிர்வாகி. நேர்மையாளர். சிறந்த பொருளாதார நிபுணர். தமிழர். ஆர்.கே. சண்முகம்!

முதல் அமைச்சரவையில் சண்முகத்தைப் போலப் பலர் வெவ்வேறு அரசியல், சித்தாந்தப் பின்னணியோடு இடம்பெற்றிருந்தார்கள். ‘‘சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது; காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல’’ என்று சொன்ன காந்தி, நாட்டின் வெவ்வேறு குரல்களைப் பிரதிபலிக்கும் ஆளுமைகளைக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முதல் அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். அம்பேத்கர், சியாமா பிரசாத் முகர்ஜி வரிசையில் அப்படி இடம்பெற்றவர்தான் சண்முகம்.

வெலிங்டன் பிரபுவின் செல்லப் பிள்ளை

கோயமுத்தூரில் 1892 அக்டோபர் 17-ல் பிறந்தார் சண்முகம். தந்தை கந்தசாமி தொழிலதிபர். பெரிய தன வணிகர்களான இக்குடும்பத்தவர் ஆலைகளையும் நடத்திவந்தனர். பள்ளிக் கல்வியை கோயமுத்தூரில் முடித்த சண்முகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சண்முகம், நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1917-ல் கோவை நகரமன்ற உறுப்பினரானார். பிறகு, நகர சபைத் துணைத் தலைவரானார். நகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

1920 முதல் 1922 வரையில் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். பிறகு, நீதிக் கட்சியிலிருந்து விலகி, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார்.

மத்திய சட்டப் பேரவை என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட தேசிய நாடாளுமன்றத்துக்கு 1924-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1928, 1929, 1932-களில் ஜெனிவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் மாநாடுகளில் இந்திய முதலாளிகள் தரப்பில் கலந்துகொண்டார். பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியமையால் 1932-ல் ஆட்டாவா நகரில் நடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பொருளாதார மாநாட்டிலும் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1932-ல் மத்திய சட்டப் பேரவையின் துணைத் தலைவராகவும், பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 வரையில் அப்பதவியில் இருந்தார். மத்திய சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தபோது லார்ட் வெலிங்டன் பிரபு இவரைத் தனது செல்லப் பிள்ளை என்றே அறிவித்தார்.

இந்தியப் பிரதிநிதி

மத்திய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை இழந்ததும் கொச்சி சமஸ்தானத்தில் திவானாகப் பதவியேற்றார். 1935 முதல் 1941 வரையில் அப்பதவியில் இருந்தார். கொச்சி துறைமுக அறக்கட்டளை நிர்வாகத்தை மேம்படுத்தினார். 1938-ல் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பின் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1944 உலக பன்னாட்டுச் செலாவணி மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இவ்வளவு சிறப்புகளையும் தாண்டி, சண்முகத்தை காந்தி தேர்ந்தெடுக்க விசேஷக் காரணங்கள் இருந்தன. அவர் சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் அல்ல; எனினும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக உழைத்தவர். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத்தனங்களுக்கும் எதிராகத் தீவிரமான கருத்துகளைக் கொண்டிருந்தவர். அடித்தட்டு சமூகத்தின்பால் அக்கறை கொண்ட அதேசமயம், முதலாளிகள் வர்க்கத்துடன் உரையாடக் கூடிய ஆளுமை அவரிடம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் சிறந்த பொருளாதார ஆளுமை அவர்.

நாட்டின் முதல் பட்ஜெட்

முதல் நிதியமைச்சருக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருந்தன. அப்போது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 50%-க்கும் மேல் விவசாயத்திலிருந்துதான் கிடைத்தது. ஆனால், அந்த வருமானம் போதவில்லை. பிரிட்டிஷார் விட்டுச் சென்றபோது, ஓரிரு கனரகத் தொழிற் சாலைகளைத் தவிர பெருமளவில் தொழில் கட்டமைப்புகள் இல்லாத நாட்டில் தொழில் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. எழுத்தறிவின்மை மிகப் பெரிய சமூக நோயாகப் பீடித்திருந்தது.

நாடு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்தது. விவசாயம், தொழில்துறை, ராணுவம், கல்வி, சுகாதாரம், அடித்தளக் கட்டமைப்பு வசதிகள், தகவல் தொடர்பு, போக்குவரத்து என்று எல்லாத் துறைகளும் பகாசுரப் பசியோடு காத்திருந்த வேளையில், மிகக் குறைவான கையிருப்பு நிதி வசதியோடு, வரி விதிப்பு மூலம் வருவாயைத் திரட்ட முடியாத இக்கட்டில் நாட்டின் முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார் சண்முகம். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை அவர் 26 நவம்பர் 1947-ல் தாக்கல் செய்தார். “இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக இந்தியர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட இந்திய அரசின் சார்பில் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறேன்” என்று தனது உரையில் குறிப்பிட்டார் சண்முகம்.

முதல் பட்ஜெட்டில் நாட்டின் மொத்தச் செலவே ரூ.197.39 கோடிதான். அதில் ராணுவத்துக்கு மட்டும் ஒதுக்கியது ரூ.92.74 கோடி (47%). காரணம், தேசப் பிரிவினை நடந்திருந்த நேரம். நாடு முழுவதும் பிரிவினை முழக்கங்கள் எதிரொலித்தன. தேசத்தின் பாதுகாப்புக்குப் பிரதான கவனம் அளிக்க வேண்டியிருந்தது. எஞ்சிய தொகையிலேயே எல்லாத் திட்டங்களுக்கும் சண்முகம் ஒதுக்கீடுசெய்ய வேண்டியிருந்தது. சண்முகம் யாருடைய நலனுக்காக உழைத்தார் என்பதை உணர ஒரு உதாரணம் போதுமானது. சண்முகம் கடுமையாக வரி விதித்தது கார்களுக்கு. அதற்கு அவர் சொன்ன காரணம், ‘‘கார்களுக்கு விதிக்கும் வரியால் சாமானியர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லை, இது அவசியமான செலவல்ல; ஆடம்பரம்.’’ மொரார்ஜி தேசாய் 1962-63-ல் கார்கள் மீதான இறக்குமதித் தீர்வையை 100% முதல் 150% வரை உயர்த்தியது சண்முகத்தின் பாணிதான்.

வரலாறு மறக்காது

மிகக் குறுகிய காலமே நிதியமைச்சராக இருந்தார் சண்முகம். நிதித் துறையில் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் எடுத்த முடிவு ஒன்று விமர்சனத்துக்கு உள்ளானபோது, அதற்குத் தார்மிகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகினார் சண்முகம். மத்திய அரசிலிருந்து விலகியவர், மாநில அரசியலுக்குத் திரும்பினார். 1952-ல் நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றார். ஆனால், அடுத்த ஆண்டே - 1953 மே 5 அன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தைத் தாண்டியும் தமிழுக்கு சண்முகம் செய்த பெரிய தொண்டு தமிழிசைக்கான அவருடைய பங்களிப்புகள். நிறைய எழுதலாம். அவ்வளவு கொண்டாடப் பட வேண்டியவர் சண்முகம். தமிழகம் வழக்கமான தன் சாபக்கேட்டின்படி ஒரு ஆளுமையை மறந்தது. ஆனால், வரலாறு என்றும் அவர் பெயரைத் தக்க வைத்திருக்கும்!

தமிழகத்தின் மர்லின் மன்றோ "டி .ஆர் .ராஜகுமாரி" ஒரு சரித்திரம்

தமிழகத்தின் மர்லின் மன்றோ டி .ஆர் .ராஜகுமாரி பிறந்த தின (மே 5, 1922) சிறப்பு பகிர்வு.!!

எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமண்யம் (பத்மா சுப்ரமண்யத்தின் அப்பா) அங்கே துரு,துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். Visibly Smart ! ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார். இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரின் தாயார்.

ராஜகுமாரியின் தாயாருக்கு தனலட்சுமி சகோதரி. தமிழ் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக்கன்னி டி.ஆர் ராஜகுமாரி. Vamp role என்றால் அதற்கு Role model ராஜகுமாரி தான். முதன் முதலான Item Dancer.

’மன்மதலீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்’
என்று ’ஹரிதாஸ்’(1944) படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் இவரைப்பார்த்துத் தான்.

’சந்திரலேகா’ படத்தில் எம்.கே.ராதாவுடனும் ரஞ்சனுடனும், 'குலேபகாவலி’(1955)யில் எம்.ஜி.ஆரின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி.

”வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே!” இவரிடம் ஒரு விஷேச நளினம் இருந்தது. சல்லடை போட்டுத் தேடினாலும் அதை வேறு எந்த ஒரு நடிகையிடமும் காணவே முடியாது. அவர் பார்க்கும் ’பார்வை’ மிடுக்குடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.

அதற்கு அந்த அற்புதமான கண்கள் தான் மூலதனம். வாள் விழி வீச்சு!

வில்லியாக வரும்போது அந்தக்கண்களில் கொப்பளிக்கும் ’குயுக்தி’, கதாநாயகியாக வரும்போது அதே கண்களில் தெறிக்கும் ’குறும்பு’. ’குலேபகாவலி’யின் இயக்குனரான தன் தம்பி ராமண்ணாவின் ’பெரிய இடத்துப் பெண்’(1963)ணில் எம்.ஜி.ஆருக்கு அக்காவாக நடித்தவர். தன்னை கற்பழித்த எம்.ஆர்.ராதாவை நள்ளிரவில் கொல்ல வருவார். அந்த காட்சிகள் திகிலாக இருக்கும்.

நடிகை ராஜகுமாரி தன் பெயரிலேயே கட்டிய தியேட்டர் தி. நகர் பாண்டி பஜாரில் அந்தக்காலத்தில் ஒரு லேண்ட் மார்க். ராஜகுமாரி பஸ் ஸ்டாப்!

சினிமா இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பதற்றமாக படபடப்பாக, கோபமும், ஆவேசமுமாக பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் ராமண்ணா செட்டில் இருப்பதே தெரியாது. அவ்வளவு அமெரிக்கையானவர். சாந்த சொரூபி. இடி போன்ற பிரச்னைக்கும் கலங்கவே மாட்டார். அப்படிப்பட்டவரின் தமக்கை என்பதும் ராஜகுமாரிக்கு பெருமை சேர்க்கிற விஷயம் தான்.

தன் தம்பி ராமண்ணாவின் மூன்று மனைவிகளையும் அரவணைத்து, குடும்பத்தில் சிக்கல் இல்லாத நிம்மதி நிலவ, நேர்த்தியான திறமையுடன் செயல் பட்டவர்.

சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு புண்ணியவதி. தன் குடும்பத்திற்காக, தம்பிகளுக்காக அவர் தன்னை தியாகம் செய்த மெழுகுவர்த்தி. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தவர். Sage-ing while age-ing.

மரம் முத்துனா வைரம்! மனுஷப்பிறவி முத்துனா புத்தி! ஞானம்!

தமிழ் சினிமாவின் ஜகதலப் பிரதாபன்!- பி.யு. சின்னப்பா


தமிழ் சினிமாவின் ஜகதலப் பிரதாபன் "புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா" பிறந்த தினம் (மே 5, 1916) சிறப்பு பகிர்வு.!!


எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்பவர்களை ‘சகல கலா வல்லவர்’ என்று கூறுவது 80களில் பிரபலம். வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணியின் வேடம் பிரபலமானதால் 90களில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று அழைக்க ஆரம்பித்தனர். இப்போது சந்தானத்தின் தயவால் ‘அப்பா டக்கர்’.

ஆனால் 1950களில் இப்படிப்பட்டவர்களை எப்படி அழைத்தார்கள்!? “ ஜகதலப் பிரதாபன்!”. அழைக்கக் காரணமாக இருந்தவர் பி.யு. சின்னப்பா. அடுத்த ஆண்டு (2016) நூற்றாண்டு நாயகராகக் கொண்டாடப்பட இருக்கும் இவர், கலை வாழ்வில் மட்டுமல்ல நிஜவாழ்விலும் ஜகதலப் பிரதாபன்தான்.

1944-ல் எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து இயக்கிய படம் ‘ஜகதலப்பிரதாபன்’. இந்தியப் புராணக்கதை மரபில் புகழ்பெற்ற ஒன்று ‘பன்னிரண்டு மந்திரிமார் கதை’. அதில் ஒரு கதைதான் ஜகதலப் பிரதாபனின் கதை.

பூலோக அரசனாகிய பிரதாபன், இந்திரலோகம், நாகலோகம், அக்னிலோகம், வருணலோகம் ஆகிய நான்கு லோகங்களின் ராஜகுமாரிகளைத் தனது அழகாலும் திறமைகளாலும் கவர்ந்து மணம் முடித்து வாழ்பவன். ஒருமுறை தேவலோக ராஜகுமாரியாகிய இந்திராணி கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட அவளை அழைத்துவர இந்திரசபைக்கு வருகிறான் பிரதாபன். மனைவியை அனுப்பிவைக்கும்படி தேவேந்திரனிடம் கேட்கிறான். “ ஆய கலைகளில் உனக்குத் திறமை இருந்தால் இந்த சபையில் அதைக் காட்டிவிட்டு உன் மனைவியை அழைத்துச் செல்” என்று இந்திரன் சவால்விடுகிறார். சவாலை ஏற்கும் பிரதாபன் (சின்னப்பா) “ தாயே பணிந்தேன்” என்ற பாடலைப் பாடிக் காட்டி சவாலில் வெற்றிபெறுகிறார்.

ஜி. ராமநாதன் இசையில் அமைந்த இந்தப் பாடல் காட்சியில் ஐந்து வேடங்களில் அற்புதமாகப் பாடி நடித்தார் பி.யு. சின்னப்பா. பாடும் வித்வானாக நடுநாயகமாக அமந்து பாட, அவரது வலப்பக்கம் வயலின் வித்வான், கடம் வித்வான், இடப்பக்கம் புல்லாங்குழல் வித்வான், கொன்னக்கோல் வித்வான் என்று ஐந்து வேடங்களில் அந்தந்தக் கலைஞர்களுக்கே உரிய உடல்மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்தி பி.யு சின்னப்பா நடித்திருந்தார். இந்தக் காட்சியை அந்நாளின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் மிகத் தந்திரமாகப் படமாக்கியிருந்தார். இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து அவரை ‘ஜகதலப் பிரதாபன்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். 280 நாட்கள் ஓடிய இந்தப் படம், தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ வெளியான பிறகே திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டது.

நீள்வட்ட முகம், காந்தக் கண்கள். நீள மூக்கு, பேசும் உதடுகள், தோள்களில் புரளும் பாகவத சிகையழகு. கொஞ்சம் புஷ்டியான உடல் என்று அந்த நாளின் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் நாடகம் வழியே சினிமாவுக்கு வந்த இந்த சகல கலா சக்ரவர்த்திக்குத் தெரியாத விஷயங்களே இல்லை.

சின்னப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை. உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இருவருக்கு இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் ஐந்து வயது முதலே நாடக ஆர்வம். அப்பாவிடம் நாடகப் பாடல்களைக் கற்றுக்கொண்டு பாடத் தொடங்கிய சின்னப்பா ஆறு வயதில் ‘சதாரம்’ என்ற நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

பிறகு எட்டு வயதில் குஸ்தி, சிலம்பம் கற்று, பத்து வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்த்துவிடப்பட்டார். பிறகு பன்னிரண்டு வயதில் புதுக்கோட்டைக்கு நாடகம் போட வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தவருக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய். பிறகு மதுரைக்கு குழுவுடன் பயணித்த சின்னப்பாவுக்கு 14 வயதில் 75 ரூபாய் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டார் முதலாளி.

ஒரு நாள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் அனைவரும் தங்கியிருக்கும் வீட்டில் ‘சதி அனுசூயா’ நாடகத்தில் இடம்பெறும் பாடல்களை ரசித்துப் பாடிக் கொண்டிருந்தார். இவர் சாரீரமும் பாவமும் காற்றைக் கிழித்துக்கொண்டு மேல் மாடியிலிருந்த ஸ்ரீ சச்சிதானந்தப் பிள்ளையின் காதுகளை நிறைத்தது. அவர்தான் கம்பெனி முதலாளி. “இவ்வளவு திறமையான பாடகன் யாரப்பா!?” என்று எழுந்துபோய்ப் பார்த்திருக்கிறார்.

முதலாளி எதிரில் வந்து நின்றாலும் பாடலைப் பாதியில் நிறுத்தாத சின்னப்பாவின் ஈடுபாட்டையும் திறமையையும் பார்த்துச் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்திவிட்டார். இதன் பிறகு சின்னப்பா நாடக உலகில் சிகரம் தொட ஆரம்பித்தார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பா ராஜபார்ட்டாக (கதாநாயகன்) உயர்த்தப்பட்டார்.

அதே கம்பெனியில் நடித்துவந்த எம்.ஜி.ஆர். , எம்.ஜி.சக்ரபாணி, பி.ஜி.வெங்கடேசன், பொன்னுசாமி , அழகேசன், காளி என்.ரத்தினம் என எண்ணற்ற நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். அதிக நண்பர்கள் இருந்தாலும் சின்னப்பாவிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பார்களாம். காரணம் அவர் கொஞ்சம் கோபக்காரர்.

இன்று நமது கதாநாயகர்கள் ‘சிக்ஸ் பேக்’ ‘ எய்ட் பேக்ஸ்’ என்று உடலை முறுக்கேற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் 190 பவுண்ட் எடை வரை தூக்கி பரிசுகளை வென்று முறுக்கான வெயிட் லிஃப்டராக விளங்கினார் சின்னப்பா. இந்தியா, பர்மா, பினாங்கு, மலேசியா, ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நடித்து வந்த ‘சந்திரகாந்தா’ நாடகத்தின் புகழ் பிரிட்டிஷ் இந்தியா முழுக்கப் பரவியது. அதை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து 1936-ல் வெளியிட்டது. டெல்லியிலும் கல்கத்தாவிலும்கூட மேடையேறியது.

அதில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் வரவு தமிழ் சினிமாவின் முதல் சகல கலா கதாநாயகனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ஆர்யமாலா, ஜகதலப் பிரதாபன், கண்ணகி, குபேர குசேலா, ஹரிச்சந்திரா, மஹாமாயா, பிருதிவிராஜன், மனோன்மணி, உத்தமபுத்திரன் (இரட்டை வேடம்), மங்கயர்க்கரசி, கிருஷ்ண பக்தி என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த கதாநாயகனாகக் கவர்ந்தார்.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவித்தார். இதை அறிந்த புதுக்கோட்டை ராஜா, இனி சின்னப்பா இங்கே வீடுகளை வாங்கக் கூடாது என்று தடையே போட்டாராம்.

பிருதிவிராஜன் படத்தில் பிருதிவியாக நடித்த சின்னப்பாவுக்கும், சம்யுக்தையாக நடித்த ஏ.சகுந்தலாவுக்கும் இடையிலான திரைக்காதல் நிஜத்திலும் காதல் மணமாய் முடிந்தது. பாட்டையும் நடிப்பையும் தன்னிரு கண்களெனக் காத்து வந்த பி.யு. சின்னப்பா தனது 35வது வயதிலேயே திடீர் உடல்நலக்குறைவால் பூவுலகை விட்டு நீங்கினார். ஆனால் அவர் நடித்த படங்களும் பாடிய பாடல்களும் இன்னும் மவுசு குறையாமல் கலையுலகின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன.

இயற்கை வேளாண் விஞ்ஞானி "நம்மாழ்வார்" (G.Nammalvar)

இயற்கை விவசாயத்தின் தீவிரப் பிரச்சாரகரும் தமிழகத்தின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜி. நம்மாழ்வார் (G.Nammalvar) பி...